நெகிரி செம்பிலான், கோலா பிலாவில் உள்ள விளையாட்டுப் பள்ளி விடுதியில் 14 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் 16 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அல்ஸாஃப்னி அஹ்மாட் கூறுகையில் இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார்.
முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு சுமார் 8 மணியளவில் விடுதியில் காயமடைந்த மாணவர், கோலா பிலா, துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மாணவர் விடுதியில் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டு இதுவரை போலீஸ் துறையால் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக ஊகங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், விசாரணைக்கு தகவல் உள்ளவர்கள் போலீஸ் துறைக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் அல்ஸாஃப்னி அஹ்மாட் கேட்டுக் கொண்டார்.








