காசாவிற்கான மனிதநேய பணிகளின் இறுதிக் கட்டத்தில் இணைவதற்காகத் தான் பயன்படுத்தவிருந்த படகு, புறப்படுவதற்கு முன்னரே நாசவேலை செய்யப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
காசாவிற்கான மலேசிய அவசர உதவி குழுவிற்குத் தலைமைவகித்து வரும் அமிருடின் இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேலிய சியோனிச ஆட்சியுடன் தொடர்புடைய சில தரப்பினர், அப்படகை அடையாளம் கண்டு, அதனை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவிப் பொருட்கள் கொண்டு செல்லவும், அவர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் உலக நாடுகளில் பல மனிதநேய உதவிகளுடன் கப்பல் பயணங்களில் இணைந்து வரும் சூழலில் இந்த சேதப்படுத்தும் சம்பவம் நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமது மனிதநேயப் பயணத் திட்டத்தில், இரண்டு தனித்தனி சேதப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்ததாகவும், ஒன்று கிரேக்க கடற்பரப்பிலும் மற்றொன்று துருக்கி அருகேயும் நடந்திருப்பதாகவும் அமிருடின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, இஸ்ரேலியப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 மலேசியர்கள் உட்பட குளோபல் சுமூத் புளோட்டிலா கப்பலைச் சேர்ந்த 428 செயற்பாட்டாளர்களும் நேற்று விடுவிக்கப்பட்டதோடு, துருக்கி இஸ்தான்புல் நகரை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








