கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தனது 12 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவருக்கு 42 ஆண்டுகள் சிறை தண்டனையும் 24 பிரம்படிகளும் கொடுக்கப்பட தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையைக் குறைக்கும்படி குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் செய்த கோரிக்கையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஒருமுறை கூட மன்னிக்க முடியாது, 105 முறை கற்பழித்தால் எப்படி மன்னிக்க முடியும் ? என்று நீதிபதி குழுவுக்குத் தலைமை ஏற்ற டத்தோ ஹடாரியா ஷெட் இஸ்மாயில் அந்த விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து கிள்ளான் உயர்நீதிமன்றத்தில் கொடுத்தத் தண்டனையை நிலைநிறுத்தினார்.
காஜாங் சிறையில் தண்டனையை அனுபவித்த காலத்தில் தமது கட்சிக்காரர் மிகவும் வருத்தப்பட்டதாகவும் அவர் திருந்தி விட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கே ஏ ராமு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருந்தும் முன்னர் கொடுக்கப்பட்டத் தண்டனையை நிலை நிறுத்த அரசு தரப்பு வழக்கறிஞர் டியா ஷஸ்வானி இஸ்யான் முஹமாட் அகிர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
பெட்டாலிங் ஜெயா, சுங்கை வேயில் உள்ள வீடு ஒன்றில் 105 முறை 12 வயது சிறுமியைக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சனவரி 5 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு பிப்பரவரி 24ஆம் தேதி வரை கற்பழித்து வந்துள்ளார்.








