கோலாலம்பூர், ஜூலை.29-
மலேசிய குடிநுழைவுத்துறையினர், கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பயண ஆவணங்கள் இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட அந்நிய நாட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.
இந்தச் சோதனையின் போது மொத்தம் 758 அந்நிய நாட்டவர்களிடம் சோதனையிடப்பட்டது. இதில் 171 பேர் குடிநுழைவு தொடர்பான குற்றறங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களின் பெரும் பகுதியினர் இந்தியா, வங்காளதேசம் மற்றும் இந்தோனேசியர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
சிலர் தப்பி ஓட முயற்சி செய்து ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டனர். இன்னும் சிலர், கடைகளில் சட்டவிரோதமாக வேலை செய்த போதிலும், அதிகாரிகளைக் கண்டதும் வாடிக்கையாளர்களைப் போல நடிக்கத் தொடங்கியதாக பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.
எனினும் மழை பெய்ததால் சோதனையை முழுமையாக மேற்கொள்ள இயலவில்லை என்று அவர் விளக்கினார்.
அனைத்து முதலாளிகளும் வெளிநாட்டினரைச் சட்டப்பூர்வமாக வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும், அவர்களைச் சட்டவிரோதமாகப் பணியமர்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஸ்ரி ஒத்மான் எச்சரித்தார்.








