சிரம்பான், ஜூலை.16-
கோலாலம்பூரில் தாம் பணியாற்றி வந்த ஒரு சுற்றுலாப் பயண நிறுவனத்தில் தன்னுடைய சொந்த நலனுக்காக 55 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஹோட்டல் முன்னுறுதிக் கட்டணம் என்ற பெயரில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து அந்தப் பணத்தைக் கோரியதாக நம்பப்படும் பெண் குமாஸ்தா ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
நெகிரி செம்பிலான் எஸ்பிஆர்எம்மினால் கைது செய்யப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், இன்று காலையில் சிரம்பான், நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஃபைருஸ் ஷுஹாடா அம்ரான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவரை வரும் ஜுலை 22 ஆம் தேதி வரை 7 நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
நேற்று நெகிரி செம்பிலான் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அந்தப் பெண், விசாரணைக்குப் பின்னர் இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
2023 ஆம் ஆண்டு மார்ச்சுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரிக்கும் இடைப்பட்டக் காலத்தில் அந்தப் பெண் குமாஸ்தா இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.








