கோலாலம்பூர், அக்டோபர்.03-
காஸாவிற்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களைக் கொண்டுச் சென்ற Global Sumud Flotilla தன்னார்வாலர்களின் கப்பலை இடைமறித்து, அவர்கள் அனைவரையும் தடுத்து வைத்திருப்பது, உலகளாவிய மனிநேயத்திற்கு முரணானதாகும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
Global Sumud Flotilla தன்னார்வாலர்களின் பணியில் மனிதாபிமானமும், மனிதநேயமும் இருந்த போதிலும்,அவர்களை இடைமறித்து சிறைப்பிடித்து இருப்பது உலகளாவிய மதிப்புகளுக்கு எதிரானதாகும் என்று மாமன்னர் வர்ணித்தார்.
முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பசியால் அவதிப்படுபவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, தன்னார்வாலர்களை உள்ளடக்கிய நிலையில் இந்த உன்னதப் பணி மேற்கொள்ளப்பட்டதாக மாமன்னர் விவரித்தார்.
மலேசியர்கள் உட்பட Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் ஈடுபட்டுள்ள தன்னார்வாலர்கள், அனைத்துலக அரங்கிற்கு மனித நேய செய்தியைக் கொண்டுச் சென்றதில் ஆபத்தையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
அவர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் மனிதாபிமானப் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், அவர்கள் தடுக்கப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இது உண்மையிலேயே உலகளாவிய மனித நேய அம்சங்களுக்கு எதிரானதாகும் என்று இன்று தமது முக நூலில் வெளியிட்டுள்ள செய்தியில் மாமன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.








