மியான்மரின் லவுக்கைங்கில் வேலைவாய்ப்பு மோசடியில் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 26 மலேசியர்களை அடையாளம் கண்டு அவர்களை மீட்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக வெளியுறவுத்துறை துணை அமைச்சர் முஹமாட் அலாமின் தெரிவித்தார்.
தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து மியான்மரின் யாங்கூனில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாக மலேசியாவுக்குக் கொண்டு வர அனைத்து மாற்று வழிகளையும் அரசாங்கம் ஒருங்கிணைத்து பயன்படுத்துகிறது என்றார்.
கடந்த நவம்பர் 3 ஆம் தேதி வரையில், தமது அமைச்சு 518 பேரை மீட்டுள்ளது எனவும் விசாரணைக்கு உதவ, தாயகம் திரும்பியவுடன், காவல் துறையினர் அவர்களை நேரில் சந்தித்து தகவ; சேகரிக்க இருப்பதாகவும் முஹமாட் அலாமின் கூறினார்.
அதே சமயம், சந்தேகத்திற்குரிய சமூக ஊடக தளங்கள் மூலம் எந்தவொரு வேலை வாய்ப்புகளையும் ஏற்கும்போது, எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மலேசியர்களுக்கும் வெளியுறவு அமைச்சு நினைவூட்டுகிறது என்றார் அவர்.
வேலைவாய்ப்பு மோசடி குற்றங்களில் பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை வகுக்க மியான்மர் நாட்டு அதிகாரத்துவத்திடம் இருந்து சம்மதத்தைப் பெற மலேசிய அரசாங்கம் காத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.








