மூளை பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, 10 மாதங்களுக்கு பிறகு மரணம் அடைந்த முன்னாள் தேசிய ஹாக்கி வீரரின் மனைவிக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கு 3 லட்சத்து 35 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்கும்படி தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாதுவின் மரணத்திற்கு தம்முடைய கவனக்குறைவு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று அந்த மருத்துவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அதற்கான எதிர்விளைவாக இந்த இழப்பீட்டை அவர் வழங்கியாக வேண்டும் என்று நீதித்துறை ஆணையர் டத்தோ ராஜா அஹ்மாட் முஹ்சானுடின் ஷா ராஜா மொஹ்சான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த மாதுவான சலின்டர் கோர் சார்பில் அவரின் கணவர் அவ்தார் சிங் இவ்வழக்கை தொடுத்து இருந்தார். கிளானா ஜெயாவை தளமாக கொண்ட தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அந்த மருத்துவர், தமது தகுதிக்கு அப்பாற்பட்ட நிலையில் செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தமது 33 பக்கங்களை உள்ளடக்கிய தீர்ப்பில் நீதித்துறை ஆணையர் டத்தோ ராஜா அஹ்மாட் முஹ்சானுடின் தெரிவித்துள்ளார்.








