புக்கிட் மெர்தாஜாம், அக்டோபர்.26-
பினாங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று பள்ளிகளை நிவாரண மையங்களாக மாற்றியதைத் தொடர்ந்து, நாளை முதல் இரண்டு நாட்களுக்கு அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த 1,786 மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் - கற்பித்தலில் ஈடுபடவுள்ளதாக பினாங்கு கல்வித் துறை இயக்குநர் முகமட் ஸியாவுடின் மாட் சாஆட் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக இந்த நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பள்ளிகளில் உள்ள பல வகுப்பறைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், பருவமழை காலங்களில் எஸ்பிஎம் மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, கல்வி அமைச்சின் கீழ் ஓப்ஸ் பாயுங் திட்டத்தின் மூலம் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எஸ்பிஎம் மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தால், அவர்கள் தேர்வு மையங்களை அடைவதற்கான மாற்று ஏற்பாடுகள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.








