Dec 20, 2025
Thisaigal NewsYouTube
ஹலால் சான்றழிக்கப்பட்ட வளாகங்களில் பிற மத பண்டிகைகளுக்கான அலங்காரங்கள் செய்ய அனுமதி - அமைச்சர் ஸுல்கிஃப்லி அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஹலால் சான்றழிக்கப்பட்ட வளாகங்களில் பிற மத பண்டிகைகளுக்கான அலங்காரங்கள் செய்ய அனுமதி - அமைச்சர் ஸுல்கிஃப்லி அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.20-

ஹலால் சான்றளிக்கப்பட்ட ஹோட்டல் சமயலறைகள் மற்றும் உணவகங்கள், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பிற மத பண்டிகைகளுக்கான அலங்காரங்கள் அல்லது விளம்பரங்களைக் காட்சிப்படுத்தலாம் என சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸுல்கிப்ஃலி ஹசான் தெரிவித்துள்ளார்.

மலேசிய சமய இலாகாவான JAKIM-இன் 2023 ஆம் ஆண்டு தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், அலங்காரங்கள் நிரந்தரமற்றதாக இருக்க வேண்டும் என்பதோடு, மத வழிபாட்டுப் பொருட்களை உள்ளடக்கியிருக்கக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில், ஹலால் சான்றிதழ் அல்லது ஹலால் சின்னத்துடன் சேர்த்து அந்த அலங்காரங்களைக் காட்சிப்படுத்தக்கூடாது என்றும் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

மேலும், ஹலால் சான்றழிக்கப்பட்ட ஹோட்டல்கள் சமயலறைகளும், உணவகங்களும் இது தொடர்பான விளக்கங்களை சம்பந்தப்பட்ட இலாக்காக்களுடன் உடனுக்குடன் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மலாக்காவில் ஹலால் சான்றழிக்கப்பட்ட ஹோட்டல் சமயலறைகளும், உணவகங்களும் கிறிஸ்துமஸ் அலங்காரங்களைச் செய்ய மாநில சமய இலாகா தடை விதித்துள்ளதாக கூறப்பட்ட செய்திகளுக்கு பதிலளித்த ஸுல்கிஃப்லி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மலாக்கா மாநில சமய இலாகாவின் இந்த முடிவை, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சால்லே மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஹலால் சான்றிதழ் என்பது, சம்பந்தப்பட்ட உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவிற்காக மட்டுமே என்று குறிப்பிட்ட அவர்கள், கிறிஸ்துமஸ் அலங்காரத்திற்கும் அதற்கும் எந்த ஒரு தொடர்பு இல்லை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், அனைத்து மதத்தினரின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள ஸுல்கிஃப்லி, தொழில்துறை நிறுவனங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்காத வகையில், ஹலால் தரநிலைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related News