கூச்சிங், மே.24-
போதைப்பொருள் வாங்க 30 ரிங்கிட் பணம் கேட்டதற்கு, அதனைத் தர மறுத்த மனைவியைத் தாக்கிய 26 வயதுடைய கணவனை சரவாக் மாநிலத்தின் Saratok மாவட்டக் காவற்படையினர் கைது செய்துள்ளனர். மே 21 அன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றும் மனைவி தனது முகத்திலும் முதுகிலும் பலத்த காயமடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக மாவட்டக் காவற்படைத் தலைவர் டெபுட்டி சுப்ரிண்டெண்டன் மேத்தியூ மங்கி தெரிவித்தார்.
கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில், அவர் amphetamine, methamphetamine ஆகிய போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதியானது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் குடும்ப வன்முறைச் சட்டம், குற்றவியல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் காவற்படையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








