குவாந்தான், டிசம்பர்.09-
பாயா பூலாய், கம்போங் பத்து 4-ல் உள்ள தனது வீட்டில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நடமாடுவதைக் கண்ட பொறியியலாளர் ஒருவர், உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தின் போது, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், அந்த மர்ம நபர், வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தெமர்லோ போலீசார், அந்த மர்ம நபரைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு, பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், 36 வயதான அந்த ஆடவரைப் போலீசார் கைது செய்ததாக தெமர்லோ மாவட்ட போலீஸ் துணை ஆணையர் முகமட் நஷிம் பாஹ்ரோன் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 29-ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட வெள்ளை நிற நிசான் நவாரா காரையும் அவரிடமிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே, அந்த ஆடவர் methamphetamine என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாகவும் முகமட் நஷிம் பாஹ்ரோன் குறிப்பிட்டுள்ளார்.








