மலேசியர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறதா? என்பதை பரீட்சித்துப் பார்ப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொதுத் தேர்தலை இப்போது நடத்துதற்கு துணிவு உண்டா? என்று முன்னான் பிரதமர் துன் மகாதீர் முகமது சவால் விடுத்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை கோலாலம்பூரில் நடத்திய சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் 98 வயதான துன் மகாதீர், பிரதமர் அன்வாரை நேக்கி இந்த பகிரங்க சவாலை விடுத்துள்ளார்.
நாட்டின் பிரதமராக தாம் இருந்த போது துணைப்பிரதமராக இருந்த அன்வார், தற்போது நாட்டின் பிரதமராக உள்ளார்.
தனது அரசியல் எதிரிகளை வஞ்சிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூலம் காயை நகர்த்தி வருவதாகவும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார் என்றும் துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.
தாம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்ததாகவும் எந்த சமயத்திலும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை என்றும் அரசியல் எதிரிகளை வஞ்சித்தது கிடையாது என்றும் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தாம் பிரதமராக இருந்த போது ஐந்த பொதுத் தேர்தல்களை சந்தித்தாகவும், ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாகவும், அப்படியிருந்தும்கூட பிரதமர் என்ற முறையில் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது கிடையாது என்றும் துன் மகாதீர் தெரிவித்தார்.
ஒரு வேளை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்திருப்பேன் என்றால் ஐந்து பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று இருக்க முடியாது. மக்கள் என்னை தூக்கி எறிந்து இருப்பார்கள் என்று துன் மகாதீர் கூறுகிறார்.
இந்நிலையில் மக்களின் ஆதரவு இருக்கிறதா? இல்லையா? என்பதை பரீட்சித்துப் பார்ப்பதற்கு பொதுத் தேர்தலை இப்போது நடத்தும்படி அன்வாருக்கு பகிரங்க சவால் விடுகிறேன் என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்..








