கோலாலம்பூர், ஜனவரி.03-
2026-ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு, நாட்டின் சுற்றுலாத் தலங்களின் தரத்தை உறுதிப்படுத்த மலேசிய சுற்றுலாத் தர உறுதி எனும் MyTQA திட்டம் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் என்று சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டில் சுமார் 43 மில்லியன் பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் விவரித்தார்.
சுற்றுலாத் தலங்கள் மற்றும் சேவைகளின் தரத்தை வகைப்படுத்தும் இந்த MyTQA அங்கீகாரம், சுற்றுப் பயணிகளைக்குத் தரமான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை உறுதிச் செய்யும். இது மலேசியாவை ஒரு முதன்மையான உலகளாவிய சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்த உதவும் என்று டத்தோ ஶ்ரீ தியோங் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகளை இன்முகத்துடன் வரவேற்பது மற்றும் பொது இடங்களின் தூய்மையைப் பராமரிப்பது ஆகியவற்றில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
2026-ஆம் ஆண்டு முழுவதும் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளன என்பதையும் டத்தோ ஶ்ரீ தியோங் விளக்கினார்.








