கோலாலம்பூர், ஜனவரி.21-
இந்த ஆண்டு முதல் 4-ஆம் ஆண்டு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வு, பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பாதித்து, அவர்களை விரைவாக முதிர்ச்சியடையக் கட்டாயப்படுத்துவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சைஃபுடின் அப்துல்லா இன்று தெரிவித்துள்ளார்.
2021-இல் ரத்து செய்யப்பட்ட யுபிஎஸ்ஆர் தேர்வுக்குப் பதிலாக இந்த 4-ஆம் ஆண்டு தேர்வு கொண்டு வரப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், நாம் மீண்டும் "தேர்வுகளை மட்டுமே மையமாகக் கொண்ட நாடாக" மாறுகிறோமா என்று இண்டெரா மாஹ்கோத்தா எம்.பி.யான சைஃபுடின் அப்துல்லா ஐயப்பாடு தெரிவித்தார்.
தேர்வுகள் மீது அதிக அழுத்தம் கொடுப்பதால், மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைத் தொலைத்து விட்டு, விரைவாக பெரியவர்களைப் போலச் செயல்பட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
இதற்கு முன்பு, யுபிஎஸ்ஆர் தேர்விற்காக 1-ஆம் ஆண்டிலிருந்தே மாணவர்கள் கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றனர். இப்போது இந்த 4-ஆம் ஆண்டு தேர்வினால், அவர்கள் பாலர் பள்ளியிலிருந்தே தயாராக வேண்டுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.








