Oct 29, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி: நவம்பர் 4 முதல் 11 பொருள்களின் விலை கட்டுப்படுத்தப்படுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி: நவம்பர் 4 முதல் 11 பொருள்களின் விலை கட்டுப்படுத்தப்படுகிறது

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, நவம்பர் 4 முதல் 10ஆம் தேதி வரை ஏழு நாள்களுக்கு 11 அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஒன்பது பொருள்கள் மட்டுமே கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இடம் பெற்ற நிலையில், இவ்வாண்டு தேங்காய்ப் பால், சீன உருளைக்கிழங்கு ஆகிய இரண்டு பொருள்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் தீபாவளிக்கு முந்தைய நான்கு நாள்கள், பண்டிகை நாளன்று ஒரு நாள், பண்டிகைக்குப் பிந்தைய இரண்டு நாள்கள் என மொத்தம் ஏழு நாள்களுக்கு விலைக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தீபகற்ப மலேசியாவில் ஐந்து பொருள்களின் அதிகபட்ச விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரிய வெங்காயம், இந்தியச் சிறிய வெங்காயம், துருவிய தேங்காய், முழுத் தேங்காய், ஆஸ்திரேலிய பருப்பு ஆகியவை அடங்கும்.

அதேவேளையில், இறக்குமதி செய்யப்படும் எலும்புடன் கூடிய ஆட்டிறைச்சியின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை விலைகள் தீபகற்ப மலேசியா, சபா, சரவாக், லாபுவான் ஆகிய பகுதிகளில் உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கட்டுப்பாட்டு விலைகளை வணிகர்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த, பொதுச் சந்தைகள், விவசாயச் சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவர்.

கட்டுப்பாட்டுப் பொருள்களுக்கு வணிகர்கள் இளஞ்சிவப்பு நிற விலைக் குறியீட்டைக் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் 2011ஆம் ஆண்டின் விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →