அனைத்து அரசியல் தரப்பினரும் குறுகிய அரசியல் நலன்களைவிட நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதே அரசியல் முதிர்ச்சியாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே நம்பிக்கை மற்றும் நிதி வழங்கல் ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, சமூக ஊடகப் பதிவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் அரசியல் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதுடன், அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடரவும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட தேசிய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும் வழிவகுக்கும் என்றார்.
நாடாளுமன்றக் காலம் முடியும் வரை அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்குப் பதிலாக, பிரதமரின் பதவிக்காலத்தை வரையறுத்தல், சட்டத்துறைத் தலைவர் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்புகளைப் பிரித்தல், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க உறுப்பினர்களுக்கு இணையான தொகுதி மேம்பாட்டு நிதி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கும் ஜனநாயக நடைமுறைகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் அடித்தளமாக அமையும் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.








