கோலாலம்பூர், டிசம்பர்.23-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்ததையடுத்து, இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்கும்படி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நஜிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சில தரப்பினர் அனுதாபம் தெரிவிக்காமல் இருக்கலாம், ஆனால் இப்படிப்பட்ட சூழலில், பதற்றத்தை அதிகரித்து, நிலைமையை மோசமாக்குவது சரியானதல்ல என்று தனது முகநூல் பக்கத்தில் அன்வார் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சியையும், அதிகாரப் பிரிவுக் கொள்கையையும் நிலைநிறுத்துவதில் மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், நீதிமன்றமானது யாருடைய தலையீடும் இன்றி, சட்டத்தின் படி, சுதந்திரமாக எடுத்துள்ள நேற்றைய முடிவை, தாம் மதிப்பதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில், குறைக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையை, வீட்டுக் காவலில் கழிக்க, முன்னாள் மாமன்னர், தமக்கு கூடுதல் அரசாணை உத்தரவு ஒன்றை வழங்கியதாகக் கூறி, டத்தோ ஸ்ரி நஜீப் தொடுத்திருந்த வழக்கில், நேற்று தீர்ப்பளித்த, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.
முன்னாள் மாமன்னர் வழங்கியதாகக் கூறப்படும் அந்தக் 'கூடுதல் அரசாணை' செல்லாது என்றும், அதனை செயல்படுத்த இயலாது என்றும், நீதிபதி எலிஸ் லோக் யீ சிங் நேற்று தீர்ப்பளித்தார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42 ஆவது விதியை மாமன்னர் பின்பற்றவில்லை என்று நீதிபதி எலிஸ் தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.








