Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இன்ஸ்பெக்டர் கர்ணன் கெளரவிக்கப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இன்ஸ்பெக்டர் கர்ணன் கெளரவிக்கப்பட்டார்

கோலாலம்பூர், நவ. 22-


கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து, அர்ப்பணிப்புடன் சேவையாற்றி, போலீஸ் படையின் நேர்மையையும், நம்பகத்தன்மையையும் உயிர்மூச்சாக கொண்டு பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் எஸ். கர்ணன், ஜோகூர் மாநில போலீஸ் படையின் மாதாந்திரக் கூட்டத்தில் நற்சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்..

கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, ஜோகூர், பாகோ, கம்போங் பாயா ரெடானில் தனது 82 வயது தந்தை, 76 வயது தாயார் மற்றும் 14 வயது உறவுக்காரப் பெண் பிள்ளை தங்கியிருந்த வீட்டை தீயிட்டு கொளுத்தி, மூவரையும் கொன்று விட்டு தப்பி விட்டதாக நம்பப்படும் முக்கிய சந்தேகப் பேர்வழியான 48 வயது ஆசாமியை ஐந்தே நாட்களுக்குள் தேடிக்கண்டுப்பிடிப்பதில் இன்ஸ்பெக்டர் கர்ணன் வெற்றி பெற்றார்.

மிக குறுகிய காலத்திலேயே இந்த மூன்று கொலை வழக்குகளுக்கு தீர்வு கண்டதற்காக புலனாய்வு அதிகாரி என்ற முறையில் இன்ஸ்பெக்டர் கர்ணன், போலீஸ் படையின் அபரிமித பாராட்டுக்கு உரியவராக திகழ்கிறார்.

இந்த மூன்று கொலை சம்பவங்களை நினைவுக்கூர்ந்த மூவார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரியான 38 வயது இன்ஸ்பெக்டர் கர்ணன், அந்த முக்கிய சந்தேகப் பேர்வழியை பிடிப்பதற்கு தாமும் தமது புலனாய்வுக்குழுவினரும் கோலாலம்பூர் வரை சென்று அலசத் தொடங்கியதாக குறிப்பிட்டார்.

காரணம், சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழி, மூவாரிலிருந்து கோலாலம்பூர் பண்டார் தாசேக் செலத்தானில் உள்ள திபிஎஸ் பேருந்து நிலையத்தை நோக்கி, பேருந்தில் தப்பி விட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக குறிப்பட்டார்.

அந்த சந்தேகப் பேர்வழி, மூவார் பேருந்து நிலையத்தில், தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்தது மற்றும் TBS நோக்கி பேருந்தில் ஏறியது முதலிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமாராக்களின் மூலமாக கண்டு பிடிக்கப்பட்டதாக இன்ஸ்பெக்டர் கர்ணன் நினைவுகூர்ந்தார்.

தாமும் தமது குழுவினரும் கோலாலம்பூரில் தேடுதல் வேட்டையை தொடங்கியதில் ஐந்தாவது நாளில் அந்த சந்தேகப்பேர்வழியை கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் வளைத்துப் பிடிப்பதில் தாங்கள் வெற்றிக் கண்டதாக இன்ஸ்பெக்டர் கர்ணன் நினைவுக்கூர்ந்தார்.

கடந்த 14 ஆண்டு காலமாக போலீஸ் துறையில் பணியாற்றி வருவதாக குறிப்பிடும் கர்ணன், வயதான தம்பதியர் மற்றும் அவர்களின் 14 வயது பேத்தி ஆகியோர் தீயில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தமது மனதை வெகுவாக பாதித்ததாக குறிப்பிடுகிறார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →