ஈப்போ, டிசம்பர்.12-
யுஇசி சான்றிதழ்களை அங்கீகரிப்பதை ஒருமித்தக் கருத்தாக அங்கீகரிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் ஜசெக இளைஞர் பிரிவான DAPSY (டாப்சி) கேட்டுக் கொண்டுள்ளது.
யுஇசி சான்றிதழ், கூட்டுத் தேர்வுச் சான்றிதழ் முறையாகும். அது உயர்க்கல்வி மதிப்பை வழங்குகிறது என்பதுடன் நமது தாய்நாட்டிற்குத் திறன் படைத்துவர்களை உருவாக்க முடியும் என்ற கொள்கையின் அடிப்படையில், யுஇசி சான்றிதழை அங்கீகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செயல்படுத்த ஒற்றுமை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு தேசிய DAPSY முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் வூ கா லியோங் கூறினார்.
யுஇசி சான்றிதழ் உயர்க்கல்வி மதிப்பைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அனைத்துலக அரங்கில் அங்கீகாரத்தையும் கொண்டுள்ளது. மேலும் நமது நாட்டில் உள்ள பலதரப்பட்ட கல்வி முறையில் ஒரு முக்கியமான சொத்தாகவும் உள்ளது. எனவே அதன் வளர்ச்சியானது, அரசியல் தடைகளால் தடைபடக்கூடாது என்று பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினரான வூ கா லியோங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் யுஇசி சான்றிதழை அங்கீகரிப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். இதனால் வாக்காளர்கள் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
யுஇசி சான்றிதழை அங்கீகரிப்பது என்பது கல்வி சார்ந்த பரிசீலனைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். தற்போதுள்ள அரசியல்வாதிகள் யுஇசி சான்றிதழை அங்கீகரிப்பதை தேசிய நலன்கள் அல்லது தேசியக் கல்விக் கொள்கைகளுடன் இணைக்கக்கூடாது. ஏனெனில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாதங்கள் உண்மையான சூழ்நிலையை மறைக்கின்றன என்பதுடன் உண்மையான தோற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று வூ கா லியோங் தெளிவுபடுத்தினார்.
தேசியக் கல்விக் கொள்கை என்பது மலேசிய கல்வி அமைச்சினால் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசாங்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கட்டமைப்பாகும்.
இதனால், வெவ்வேறு பாடத் திட்டங்களைக் கொண்டுள்ள சீன தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்துலகப் பள்ளிகள் போன்ற பிற கல்விக் கழகங்களுக்கு மதிப்பு இல்லை என்று அர்த்தமல்ல. மாறாக, மலாயா பல்கலைக்கழகம் உட்பட பல பொதுப் பல்கலைக்கழகங்கள் மலாய் மொழியைப் பயிற்றுவிக்கும் மொழியாகப் பயன்படுத்தாத A-நிலை அல்லது IB தகுதிகளை அங்கீகரிக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.
யுஇசி சான்றிதழை அங்கீகரிப்பது குறித்த விவாதம் ஒரு போதும் தேசிய நலன்களைச் சவால் செய்வதற்கோ அல்லது சீன தனியார் பள்ளிகளை மலேசிய கல்வி அமைச்சின் கீழ் அரசுப் பள்ளியாக மாற்றுவதற்கோ நோக்கம் கொண்டிருக்கவில்லை. மாறாக, தற்போதைய முயற்சியானது, அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பதாகும். யுஇசி சான்றிதழை அங்கீகரிப்பது என்பது அனைத்துலக அரங்கில் உயர்க்கல்வி மதிப்பையும் அதன் திறனையும் உயர்த்திப் பிடிக்கும் சான்றிதழுக்கு வழங்கப்படும் ஓர் அங்கீகாரமாகும் என்று வூ கா லியோங் வலியுறுத்தியுள்ளார்.








