புத்ராஜெயா, ஜனவரி.05
மலேசியாவின் சட்ட வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு ஒரு "முக்கியமான சீர்திருத்த ஆண்டாக" இருக்கும் என்று சட்டச் சீர்த்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் இன்று அறிவித்துள்ளார்.
நிறுவனச் சீர்திருத்தங்கள் தொடர்பான மிக முக்கியமான அரசியலமைப்பு திருத்தங்கள் வரும் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள முக்கிய சட்ட மசோதாக்களையும் அவர் விவரித்தார்.
பிரதமர் பதவிக் காலத்தை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் அல்லது இரண்டு தவணைகளாக நிர்ணயிக்கும் சட்ட மசோதா, அரசுத் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞரான பப்ளிக் பிராசிகியூட்டர் ஆகியோரின் அதிகாரங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கான சட்ட மசோதா ஆகியவை அவற்றில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் Malaysia Ombudsman எனப்படும் பொதுத்துறை புகார்களை விசாரிக்கவும், நிர்வாகத் தவற்றைச் சுட்டிக் காட்டவும் அதிகாரமிக்க ஓர் அமைப்பை உருவாக்கக்கூடிய சட்ட மசோதாவும் இவ்வாண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அஸாலினா சுட்டிக் காட்டினார்.








