மலாக்காவில், சுயசேவை சலவை நிலையத்தில் பெண்ணின் உள்ளாடைகளைத் திருடி, பாலியல் இன்பத்திற்காக அவற்றை நுகர்ந்த 39 வயது விநியோகப் பணியாளருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், முஹமட் ஹம்டான் அவால் என்ற அந்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் நூர் அஃபிகா ரதியா ஸைனுரின் இன்று இந்தத் தண்டனையை விதித்தார்.
அக்டோபர் 11-ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில், தாமான் தஞ்சோங் மின்யாக் செத்தியா பகுதியில் உள்ள சலவை நிலையத்தில் 26 வயதுப் பெண்ணுக்குச் சொந்தமான உள்ளாடைகளை அவர் திருடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் கணவர் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது, ஆறு உள்ளாடைகள் காணாமல் போனதைக் கண்டறிந்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், குற்றஞ்சாட்டப்பட்டவர் அவற்றைத் திருடியது தெரியவந்ததைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.








