கோலாலம்பூர், செராஸ் போலீஸ் தலைமையகத்தில் தடுப்பில் இருந்தபோது உயிரிழந்த 42 வயது நூரிஸ்வான் ஸுல்கெஃப்லியின் மரணம் கொலை வழக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று குடும்பத்தின் வழக்கறிஞர் என். சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
செப்டம்பர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட நூரிஸ்வான், அக்டோபர் 1ஆம் தேதி ஹோஸ்பிட்டல் சென்சலர் துவாங்கு முஹ்ரிஸில் உயிரிழந்தார். உடற்கூறு பரிசோதனையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், ஆறு முதல் ஏழு விலா எலும்புகள் முறிந்திருந்ததும், முதுகுத்தண்டில் காயங்கள் இருந்ததும் தெரியவந்ததாக குடும்பத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், அவரை போலீஸ் தடுப்பில் வைத்திருந்த குழுவுடன் தொடர்பில்லாத புக்கிட் அமானைச் சேர்ந்த சுயேட்சை விசாரணைக் குழுவிடம் விசாரணை ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.








