சிங்கப்பூர், டிசம்பர்.24-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பாக மாமன்னர் வழங்கிய கூடுதல் அரசாணை உத்தரவின் நிலையையும், அதன் அமலாக்கத்தையும் உறுதிப்படுத்த, கடந்த மூன்று மாதங்களாக தனது குடும்பத்தினர் முயற்சி செய்து வந்ததாக நஜிப்பின் மகள் நூர்யானா நஜ்வா தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை அலுவலகத்திற்கும், அதன் தொடர்புடைய அமைச்சர்களுக்கும் நஜிப் சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு, தங்களுக்கு நீண்ட மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைத்ததாகவும் நூர்யானா குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றால், அது பொதுவெளியில் தெரிய வந்து, மக்களின் உணர்வுகளைத் தூண்டும் என்ற காரணத்தினால், தனது தந்தை வேண்டுமென்றே இதனைத் தவிர்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உண்மையை மறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சூழ்நிலையில், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வர தனது தந்தை தயங்குவதாக நூர்யானா குறிப்பிட்டுள்ளார்.
மாமன்னர் வழங்கிய அரசாணையை எதிர்க்கும் தரப்பினர், நஜிப்பின் உரிமைகளை மறுக்க எந்த அளவுக்கும் செல்வார்கள் என்றும், இந்தச் செயல்பாட்டில், நமது நாட்டின் அடிப்படைத் தூண்களுக்கே சவால் விடும் சாத்தியம் உள்ளதாகவும் நூர்யானா தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில், குறைக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையை, வீட்டுக் காவலில் கழிக்க, முன்னாள் மாமன்னர், தமக்கு கூடுதல் அரசாணை உத்தரவு ஒன்றை வழங்கியதாகக் கூறி, டத்தோ ஶ்ரீ நஜீப் தொடுத்திருந்த வழக்கில், அந்தக் 'கூடுதல் அரசாணை' செல்லாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி எலிஸ் லோக் யீ சிங் தீர்ப்பளித்தார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42 ஆவது விதியை மாமன்னர் பின்பற்றவில்லை என்று நீதிபதி எலிஸ் தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.








