கோலாலம்பூர், ஆகஸ்ட்.14-
நாடாளுமன்றத்தில் ஒரு சண்டியரைப் போல நடந்து கொண்டதாகக் கூறப்படும் பெரிக்காத்தான் நேஷனலின் பெண்டாங் எம்.பி. அவாங் ஹாஷிம், நேற்று மக்களவையில் ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயரை ஒண்டிக்கு ஒண்டி குத்திக் கொள்வதற்கு நாடாளுமன்றத்திற்கு வெளியே வரும்படி அழைப்பு விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்த பாஸ் எம்.பி.யின் தலைவிதி, வரும் திங்கட்கிழமை நிர்ணயிக்கப்படும் என்று சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் முடிவு அறிவித்துள்ளார்.
பெண்டாங் எம்.பி.க்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்வதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் ஒரு சண்டியரைப் போல் நடந்து கொண்டதாகக் கூறப்படும் அந்த எம்.பி. சம்பந்தப்பட்ட வீடியோவைத் தாம் பார்க்க விரும்புவதாக சபாநாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
ஜெலுத்தோங் எம்.பி.யை நோக்கிப் பாய்ந்து சென்றதாகக் கூறப்படும் பெண்டாங் எம்.பி. அவாங் ஹாஷிம் சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோவைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி நாடாளுமன்றப் பணியாளர்களுக்கு ஜொஹாரி அப்துல் உத்தரவிட்டார்.
உண்மையிலேயே ஜெலுத்தோங் எம்.பி. ராயரைத் தாக்குவதற்கு பெண்டாங் எம்.பி. பாய்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆதாரங்கள் இருக்குமானால், நாடாளுமன்றத்தில் அனைத்து எம்.பி.க்களுக்கும் ஒரு பாடமாக இருக்கத் தாம் கடும் நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக சபாநாயகர் ஜொஹாரி அப்துல் உறுதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் ஆவார். அவையில் அவர்கள் சுதந்திரமாகப் பேசலாம்… அவ்வாறு பேசும் போது அவர்களின் மைக்ரோஃபோனைக் கூடத் தாம் முடக்குவதில்லை. ஆனால் அவர்கள் உடல் ரீதியாகப் பேச முயற்சிக்கும் போது, அவர்கள் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன் என்று சபாநாயகர் ஜொஹாரி அப்துல் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொள்ள அவர்களை உடல் ரீதியாகத் தாக்குவதற்கு நடைபெறும் முயற்சிகள் தொடர்பான காட்சிகள் ஓன்லைனில் பகிரப்பட்டு இருப்பதாக பக்காத்தான் ஹராப்பானின் கோத்தா மலாக்கா எம்.பி. கூ போயே தியோங் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
அதே வேளையில் எம்.பி.க்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய எம்மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கூ போயே தியோங் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் சபாநாயகர் ஜொஹாரி அப்துல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ள 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மக்களவையில் மே 13 கலவரம் என்ற வார்த்தையைப் பாஸ் எம்.பி. அவாங் ஹாஷிம் பயன்படுத்தியது முதல் அவருக்கும் ஜெலுத்தோங் எம்.பி.ராயருக்கும் இடையில் தொடந்து கடும் வாக்குவாதம் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் மே 13 கலவரம் வார்த்தையைப் பயன்படுத்தியதற்காகத் தன்னை மன்னிப்பு கேட்க வைத்து விட்ட ராயருக்கு எதிராகக் கடுங்சொற்களை அந்த பாஸ் எம்.பி. பயன்படுத்தி வந்த வேளையில் நேற்று இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.








