ஜோகூர் பாரு, ஜனவரி.23-
மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காக நீதிமன்றத்தால் சமூகச் சேவை செய்ய உத்தரவிடப்பட்ட முதல் நபராக இந்தோனேசியப் பெண்மணி ஒருவர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
49 வயதான அனிதா லுக்மான் என்ற அந்தப் பெண்மணி, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நள்ளிரவு 12.41 மணியளவில் ஜோகூர் பாரு, Stulang Laut பகுதியில் உள்ள ஒரு சாலையில், சிகரெட் துண்டு மற்றும் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலைக் குப்பைத் தொட்டியில் போடாமல் வீசியுள்ளார்.
இன்று ஜோகூர் பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி நோர் அஸியாத்தி ஜாஃபார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அனிதா, தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.
அந்த இந்தோனேசிய மாதுவுக்கு 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் 15 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
தவிர அந்தப் பெண்மணி 6 மணிநேரம் சமூகச் சேவை செய்ய உத்தரவிடப்பட்டது. இந்தச் சேவையை ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்.
விதிக்கப்பட்ட சமூகச் சேவையைச் செய்யத் தவறினால், 2,000 ரிங்கிட் முதல் 10,000 ரிங்கிட் வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்தார்.








