கோலாலம்பூர், ஜனவரி.28-
மலாக்கா, டூரியான் துங்கால் பகுதியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று இந்திய இளைஞர்களின் குடும்பங்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் ராஜஸ் நாகராஜன், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கை குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின் கீழ் கொலை வழக்காக சட்டத்துறை தலைவர் அலுவலகம் (AGC) மறுவகைப்படுத்தியுள்ள நிலையில், கொலைக் குற்றங்களுக்கான முழுமையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் வலியுறுத்தினார்.
இவ்வழக்கு கொலை என மாற்றப்பட்ட பின்னரும், சம்பந்தப்பட்ட எந்தவொரு போலீஸ் அதிகாரியும் இதுவரை கைது செய்யப்படவோ, தடுப்புக் காவலில் வைக்கப்படவோ அல்லது பணிநீக்கம் செய்யப்படவோ இல்லை. அவர்கள் பணியிலிருந்து மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று வழக்கறிஞர் ராஜேஸ் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், மலாக்கா போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் முக்கிய சாட்சிக்கு எதிராகப் பகிரங்கமான கருத்துகளை வெளியிட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மலாக்கா போலீஸ் தலைவருக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இது குறித்து போலீஸ் படைத் தலைவரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ எந்த விளக்கமும் வரவில்லை என்று ராஜேஷ் மேலும் கூறினார்.
நேற்று, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறுகையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தடயவியல் மற்றும் பாலிஸ்டிக் (Ballistic) அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விசாரணையில் அரசு வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கும் என்றும் அவர் பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.
அமைச்சரின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து வழக்கறிஞர் ராஜேஸ் இன்று எதிர்வினையாற்றியுள்ளார்.








