கோலாலம்பூர், ஜனவரி.28-
மலேசியா முழுவதும் 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 26 பயங்கரவாத மற்றும் தீவிரவாதத் தாக்குதல் முயற்சிகளை புக்கிட் அமானின் சிறப்புப் படையான பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு E8 முறியடித்துள்ளதாகத் துணைப் போலீஸ் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் முயற்சிகளில் குழுவாகச் செயல்பட்டவர்கள் மற்றும் தனிநபராக செயல்பட்டவர்கள் என இரு தரப்பினரும் ஈடுபட்டிருந்ததாக அயோப் கான் கூறினார்.
இதே காலக் கட்டத்தில் இரண்டு தாக்குதல்கள் மட்டும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன - ஒன்று 2016-இல் பூச்சோங்கில் உள்ள ஒரு மதுக்கடையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு, மற்றொன்று மே 2024-இல் ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல். இதில் உலு திராம் தாக்குதல் சம்பவத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
"இந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த தீவிரவாத மற்றும் பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்த 75 உறுப்பினர்களையும் E8 பிரிவு வெற்றிகரமாகக் கைது செய்தது," என்று அவர் இன்று தனது முகநூலில் டான் ஶ்ரீ அயோப் கான் பதிவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் அனைவரும் 2012-ஆம் ஆண்டு பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று அயோப் கான் விளக்கினார்.








