புத்ராஜெயா, ஜனவரி.28-
ஊழல் மற்றும் கடத்தலுக்கு எதிராகப் போரிடுவதில் தீவிரமாக இல்லாத அமலாக்கத் துறை அதிகாரிகள், தங்கள் பதவிகளிலிருந்து விலகி மற்றவர்களுக்கு வழிவிடுமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பைத் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள அன்வார், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தங்களைச் சுயபரிசோதனை செய்து கொள்ள ஒரு வாரம் கால அவகாசம் அளித்துள்ளார். ஊழலுக்கு எதிராக முழு மூச்சுடன் போராடத் தயாரா, இல்லையா என்பதை அவர்கள் இந்த வாரத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஒரு வார காலத்திற்குள், உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற நீங்கள் தயாராக இருக்கிறீர்களா இல்லையா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களால் முடியாது என்று தோன்றினால், விலகிவிடுங்கள்; மற்றவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்கட்டும்," என்று புத்ராஜெயாவில் நிதிசார் குற்றங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைத் தலைவர்களிடையே உரையாற்றும் போது அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியான் இஸ்மாயில் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஊழலை ஒழிப்பதில் நிலவும் மந்தமான செயல்பாடுகளால் தனது பொறுமை இழந்து வருவதாகக் குறிப்பிட்ட அன்வார், மக்கள் உண்மையான மாற்றத்தையே எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.
"நாட்டைப் பாதுகாக்க நாம் சீர்திருத்தங்களைச் செய்யவும், சரியான காரியங்களைச் செய்யவும் தயாராக இருக்கிறோமா என்பதை உண்மையாகவே நம்மிடம் நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், என் பொறுமை மிகக் குறைந்து விட்டது," என்று அவர் கூறினார்.
ஊழல், கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை ஒரு சாதாரண விஷயமாகக் கருதுவது நாட்டின் சாதனைகளையே அழித்துவிடும் என்றும் பிரதமர் எச்சரித்தார்.








