கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 88 . 88 பில்லியன் வெள்ளி மதிப்பிலான ஆயிரத்து 506 திட்டங்களை சிலாங்கூர் மாநில அரசு அங்கீகரித்துள்ளது.
35.88 பில்லியன் வெள்ளி உள்நாட்டு முதலீட்டையும் 58 பில்லியன் வெள்ளி அயல்நாட்டு முதலீட்டையும் கொண்டுள்ள அவை, 95 ஆயிரத்து 610 வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடியவை என சிலாங்கூர் மாநில முதலீடு, வணிகம், மூலப்பொருள் துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் , ஙா சே ஹன் தெரிவித்தார்.
உயிர் அறிவியல், உணவ, குளிர்பான உற்பத்தி, மின்சாரம், மின்னணு தயாரிப்பு, போக்குவரத்து, ட்ரோன்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் சொன்னார்.
சேவைத் துறையைப் பொறுத்தவரை, சிலாங்கூரில் போக்குவரத்து சேவைத் தொழில், டிஜிட்டல் சார்ந்த முதலீடுகளான உலகளாவிய வர்த்தகச் சேவைகள், தகவல் மையங்கள் உட்பட சிலாங்கூரில் வளர்ச்சியடையக்கூடிய பல துறைகளை அரசாங்கம் கண்டறிந்துள்ளது என்றார்.
மேலும், தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டு வட்டார உருவாக்கம், சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு, சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சி போன்றவைகளும் இந்நோக்கத்தின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் அயல்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் சிலாங்கூர் அனைத்துலக வான் பூங்காவை அமைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.








