புத்ராஜெயா, ஆகஸ்ட்.14-
முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியின் 12 வயது மகனைத் தாக்கிய இரண்டு சந்தேகப் பேர்வழிகள், போலி பதிவு எண்ணைக் கொண்ட மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாஸேலி காஹார் தெரரிவித்தார்.
நேற்று பிற்பகலில் புத்ராஜெயாவில் உள்ள பேரங்காடி மையத்தின் வாகன நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழிகளைத் தாங்கள் தொடர்ந்து தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ரஃபிஸியின் மனைவியும் 12 வயது மகனும் அந்தப் பேரங்காடிக்குச் சென்று விட்டுத் திரும்பும் போது நடந்த இந்தச் சம்பவத்தில் ரஃபிஸியின் மகனின் உடலில் ஊசிப் போன்ற ஒரு பொருள் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளைத் தாங்கள் அடையாளம் கண்டதாகவும், ஆனால், அதில் பொருத்தப்பட்டுள்ள எண் பட்டை போலியானது என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக ஷாஸேலி காஹார் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








