மருத்துவப் பட்டதாரிகள் ஹவுஸ்மேன்ஷிப் எனப்படும் பயிற்சி மருத்துவர் பணியிடங்களை குறைவாக தேர்வு செய்து வரும் நிலையில், ஒப்பந்த அடிப்படையிலான நியமன முறை தொடர வேண்டுமா? என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் டான் ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக, மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெறுபவர்களுக்கு நிரந்தர பணியிடங்களை வழங்கும் வாய்ப்பை அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நிலையில், பயிற்சி நிலையங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் நிரந்தர பணியிடங்களை வழங்கும் திறன் அரசுக்கு இருப்பதாக நினைத்தால், அவ்வழியைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும்,
ஆனால், பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நெகிழ்வுத்தன்மையை ஒப்பந்த முறை வழங்குகிறது என்று அரசு கருதினால், அதனைத் தொடரலாம் என்றும் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ பட்டதாரிகளின் தொழில்முறை முன்னேற்றத்திற்கு ஒப்பந்த முறை தடையாக மாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில் ஒப்பந்த காலம் குறைந்தது 10 ஆண்டுகள் இருந்தால் மட்டுமே, பயிற்சியில் உள்ள ஒரு மருத்துவ அதிகாரி முழுமையான சிறப்பு மருத்துவராக உயர போதுமான கால அவகாசம் கிடைக்கும் என்றும் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் பரிந்துரைத்துள்ளார்.








