கோலாலம்பூர், ஜூலை.18-
13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்திய சமுதாயத்தை தேசிய நீரோடையில் இணைப்பதற்கான ஆக்ககரமான திட்டங்களை முன் வைத்து, அரசாங்கத்திடம் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கல்வி, சமூகவியல், பொருளாதாரம், தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளில் மலேசிய இந்தியர்களை ஏற்றமிகுந்த சமுதாயமாக தேசிய நீரோடையில் இணைப்பதற்குரிய திட்டங்களை முன் வைத்துப் பிரதான பரிந்துரைகளை அரசாங்கத்திடம் மஇகா வழங்கியிருப்பதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
13 ஆவது மலேசியத் திட்டத்தில் மலேசிய இந்தியர்கள் பெற வேண்டிய அனுகூலங்களை முன் வைத்து இந்த பரிந்துரைகள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடமும், பொருளாதார அமைச்சரிடமும் மஇகா வழங்கியிருப்பதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று மஇகா தலைமையத்தில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை விவரித்தார்.
இந்திய சமுதாயத்தின் பிரதான நலனை முன் நிறுத்திய இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் தேசிய நீரோடையில் இந்திய சமுதாயம் இணைக்கப்பட வேண்டும். அதற்கு மஇகாவின் இந்த பரிந்துரைகளைப் பிரதமர் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுப்பார் என்று மஇகா நம்புவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.








