கோலாலம்பூர், ஜனவரி.09-
மலேசியத் தொடக்கப்பள்ளிகளுக்கான அடைவு நிலைத் தேர்வான யுபிஎஸ்ஆர் மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் மூன்றாம் படிவ மாணவர்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வான பிடி3 ஆகிய பொதுத் தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் விரிவான மறு ஆய்வை மேற்கொள்ளும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் இன்று அறிவித்துள்ளார்.
இந்த இரு பொதுத் தேர்வுகளையும் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. மக்களின் இந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து இது குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
தற்போதைய பள்ளி அளவிலான மதிப்பீட்டு முறை தேர்வு முறையான PBD, மாணவர்களின் கல்வித் தரத்தை அளவிடுவதற்குப் போதுமானதாக உள்ளதா அல்லது பழைய தேர்வு முறை அவசியமா என்பது குறித்துக் கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டடார்.
எந்தவொரு முடிவும் மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் கல்வி வளர்ச்சியையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதில் கல்வி அமைச்சு உறுதியாக உள்ளது என்று ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
அரசாங்கப் பொதுத் தேர்வுகளை மீண்டும் கொண்டு வருவது குறித்த இறுதி முடிவு உடனடியாக எடுக்கப்படாது. முறையான தரவு ஆய்வுகள் மற்றும் கள யதார்த்தங்களை ஆராய்ந்த பிறகே அமைச்சரவைக்கு இது பரிந்துரைக்கப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.
இந்தப் பொதுத் தேர்வுகள் முறையே 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டு, தற்போது பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டு முறை தேர்வு முறையான PBD நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது








