கோலாலம்பூர், ஜூலை.22-
தமது முன்னாள் அதிகாரியின் வீட்டில் மீட்கப்பட்ட 17 கோடி ரிங்கிட் ரொக்கப் பணத்தை, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, உரிமை கொண்டாடுவதிலிருந்து பறிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்
செய்து கொண்டுள்ள விண்ணப்பம் மீதான விசாரணை வரும் அக்டோபர் முதல் தேதி நடைபெறவிருக்கிறது.
அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் மற்றும் இஸ்மாயில் சப்ரி வழக்கறிஞர் ஆகியோரின் வாதங்களை இன்று செவிமடுத்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், இதன் மீதான விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
ஒரு பால்வெட்டுத் தொழிலாளியின் மகனான 65 வயது இஸ்மாயில் சப்ரி, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற 14 மாதங்களில் எவ்வாறு இந்த 17 கோடி ரிங்கிட் ரொக்கத்தையும்,, 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகளையும் பெற முடிந்தது என்பதில் எஸ்பிஆர்எம் விசாரணையில் சரியாக விளக்கம் அளிக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த 17 கோடி ரிங்கிட் ரொக்கம் மற்றும் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம்
வழக்கு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.








