கோலாலம்பூர், ஜனவரி.03-
தேசிய அளவிலான பள்ளிச் சீருடைகளை ஒரே மாதிரியாக்கும் கல்வி அமைச்சின் திட்டமானது, பெற்றோர்களின் நிதிச் சுமையைக் குறைக்க பெரிதும் உதவும் என்று பெற்றோர், சமூகம், தனியார் பள்ளிகள் அமைப்பின் துணைத் தலைவர் ஸைனோல் அபிடின் முஹமட் இன்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சீருடை மாற்றத் திட்டத்தால் குறிப்பாக B40 மற்றும் M40 பிரிவு பெற்றோர்களின் நிதிச் சுமை குறையும் என்று ஸைனோல் அபிடின் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகள் என்பது அறிவு மற்றும் நற்பண்புகளை வளர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, தோற்ற வேறுபாடுகளைக் காட்டும் இடமாக இருக்கக்கூடாது. சீருடைகளை ஒரே மாதிரியாக்குவது மாணவர்களிடையே தேவையற்ற போட்டியைத் தவிர்த்து ஒற்றுமையை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 2026-ஆம் கல்வி ஆண்டிற்கான சீருடைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு ஆகஸ்ட் 2026-க்குள் எடுக்கப்பட்டு, 2027-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








