2023-ஆம் ஆண்டு முதல் 20-க்கும் மேற்பட்ட நிலுவைச் சம்மன்கள் வைத்துள்ள வர்த்தக வாகனங்கள் மற்றும் பேருந்து நிறுவனங்களுக்கு அவற்றைத் தீர்க்க 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சாலைப் போக்குவரத்து துறையான ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி கூறுகையில், 940 வர்த்தக வாகன நிறுவனங்களிடம் 40 ஆயிரத்து 222 நிலுவைச் சம்மன்களும், 5 பேருந்து நிறுவனங்களிடம் 373 சம்மன்களும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவற்றின் மொத்த அபராதத் தொகை 12 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாகும்.

இந்நிலையில், 14 நாட்களுக்குள் சம்மன்களைத் தீர்க்கத் தவறும் நிறுவனங்கள் மீது ஓப்ஸ் தெகார் நடவடிக்கையின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், தரைவழிப் பொது போக்குவரத்து நிறுவனமான அபாட்டுடன் இணைந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வாகன அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடி ஃபாட்லி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் வெளியிட்ட பட்டியலைத் தொடர்ந்து, தற்போது வெளியிடப்பட்டிருப்பது இரண்டாவது நிறுவனப் பட்டியல் எனவும் அவர் கூறினார்.








