Jan 17, 2026
Thisaigal NewsYouTube
வேலையைத் தக்க வைக்க AI தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: சுங்கை பூலோவில் அமைச்சர் ரமணன் அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

வேலையைத் தக்க வைக்க AI தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: சுங்கை பூலோவில் அமைச்சர் ரமணன் அறிவுறுத்தல்

Share:

சுங்கை பூலோ, ஜனவரி.17-

மலேசியர்கள் தங்கள் வேலையைத் தற்காத்து கொள்வதற்கு AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுமாறு மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் கேட்டுக் கொண்டார்.

வேலை வாய்ப்பு உலகில் செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பம் மிக வேகமாக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதைச் சுட்டிக் காட்டினார். AI என்பது மனிதர்களுக்குப் பதிலாகச் செயல்படும் கருவியல்ல, மாறாக மனிதர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் ஒரு நவீன கருவி என்று அவர் விளக்கினார்.

இன்று சுங்கை பூலோ நாடாளுமன்றத் செக்‌ஷன் U20, டேவான் மெராந்தியில் செயற்கை நுண்ணறிவான AI அறிவாற்றலை மேம்படுத்தவும், தொழிலாளர்களின் தயார் நிலையை உறுதிப்படுத்தவும் AI MyMahir பயணத் திட்ட பயிற்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த அதே வேளையில் TalentCorp மற்றும் EY Malaysia ஆகியவற்றுக்கு இடையில் கருத்திணக்க ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட நிகழ்வை நேரில் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.

டேலன்ட்கார்ப்ப் (TalentCorp) நடத்திய ஆய்வின்படி, அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் மலேசியாவில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடும் என அமைச்சர் எச்சரித்தார். குறிப்பாக, சுமார் 6.85 லட்சம் பணியாளர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால், வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், இப்போதே புதிய திறன்களைக் கற்றுக் கொள்வது அவசியம் என்றார்.

தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் இந்தப் புதிய சவாலை எதிர்கொள்ள உதவும் வகையில், 'AI MyMahir' விழிப்புணர்வுத் திட்டம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். சுமார் 11 கோடி ரிங்கிட் முதலீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 22,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் AI தொடர்பான நடைமுறைப் பயிற்சிகளைப் பெற்றுப் பயன் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இன்று காலையில் தொடங்கிய 'AI MyMahir' விழிப்புணர்வு பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள், இந்தப் பயிற்சியில் AI தொழில்நுட்பம் குறித்து அதிகமான விஷயங்களை தெரிந்துக் கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியதாகவும், அதற்காக டத்தோ ஶ்ரீ ரமணனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதில் பொறியியல் துறை மாணவியான பாலம்பிகை விஸ்வலிங்கம் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் துறையில் AI மூலமாக என்னென்ன விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த தமக்கு பெரும் வழிகாட்டலாக இருந்தது என்று ஷார்மிகா சிவகுமார் தெரிவித்தார்.

AI மூலமாக புகைப்படங்களை எவ்வாறு தணிக்கை செய்ய முடியும் என்பதை அதிகமான தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்த பயிற்சித் திட்டம் ஏற்படுத்தியது என்று உகனவதி கணேசன் தெரிவித்தார்.

AI குறித்து இன்று எங்களுக்கு காலையிலிருந்து மாலை வரை அளிக்கப்பட்ட பயிற்சி ஆக்கப்பூர்வமான பலனை தந்துள்ளது என்று மித்ரா காசிநாதன் குறிப்பிட்டார்.

மலேசியாவின் எதிர்காலப் பொருளாதாரத்திற்குத் தேவையான போட்டித் திறன் மிக்க மனித வளத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் எனத் தெரிவித்த டத்தோ ஶ்ரீ ரமணன், குறிப்பாகத் தனது சுங்கை பூலோ தொகுதி மக்கள் இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தில் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Related News