கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-
உணவுப் பொருட்களை விரயமாக்கக்கூடாது என்ற உபதேத்துடன், தாங்கள் கடித்து சாப்பிட்டுத் துப்பியக் கோழி எலும்புத் துண்டுகளை வீடற்ற நபருக்குக் கொடுக்கும் மூன்று ஆடவர்கள் சம்பந்தப்பட்ட, வைரலான காணொளி தொடர்பில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி விசாரணைச் செய்யத் தொடங்கியுள்ளது.
இந்தக் காணொளி தொடர்பில் அந்த மூன்று நபர்களின் செயலுக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து நிறைய புகார்கள் பெறப்பட்டுள்ளதாக எம்சிஎம்சி இன்று காலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகப் பிரபலங்கள் சிலர், தங்களைப் பற்றிய மலிவான விளம்பரத்துக்காக, பொழுதுபோக்குக்காக இயலாதவர்களையும், முடியாதவர்களையும் பயன்படுத்தி அவர்களை ஒரு கேலிப் பொருளாக பயன்படுத்துவது, அவமதிப்பது, துயரத்தில் ஆழ்த்துவது போன்ற உள்ளடக்கங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதை எம்சிஎம்சி கடுமையாகக் கருதுவதாக அது குறிப்பிட்டுள்ளது.
தனிநபரின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் இது போன்ற உள்ளடக்கத்தைப் பகிர்வது, நெறிமுறையற்றச் செயல் என்பதுடன் சமூகத்திற்குள் மனிதாபிமானமற்றக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும்.
வீடற்ற நபருக்கு தாங்கள் சாப்பிட்டுத் துப்பிய கோழி எலும்புத் துண்டுகளை உணவாகக் கொடுத்து, மகிழும் அந்த மூன்று நபர்கள் குறித்து, எம்சிஎம்சி சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
மற்றவர்களை நிந்திக்கும் அல்லது அச்சுறுத்தும் தன்மையிலான உள்ளடக்கம் பகிரப்பட்டு, சம்பந்தப்பட்டவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 1998 ஆம் ஆண்டு தகவல், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 233 ஆவது பிரிவின் கீழ் 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எம்சிஎம்சி எச்சரித்துள்ளது.








