கோலாலம்பூர், பிப்ரவரி.23-
கடனை அங்கீகரிக்க, வங்கி ஒன்றின் குழும நிர்வாக இயக்குநருக்கு, 8 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் தொலைத்தொடர்பு நிறுவன இயக்குநரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
50 வயது மதிக்கத்தக்க அந்நபர், நேற்று மதியம் 12.30 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த போது கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபர், கடந்த 2012 ஆம் ஆண்டு, சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படுகின்றது.
Fibre optic திட்டத்திற்காக 400 மில்லியன் ரிங்கிட் கடனுக்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக, போலியான உத்திரவாத ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இக்கைது நடவடிக்கையை, எஸ்பிஆர்எம் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் மூத்த இயக்குநரான ஸம்ரி ஸைனுல் அபிடின் உறுதிப்படுத்தியுள்ளார்.








