ஜோகூர் மாநிலத்தில் உள்ள மாரா இளநிலை அறிவியல் கல்லூரியான எம்.ஆர்.எஸ்.எம்-மில், சக மாணவரை பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என மாரா தலைவர் அஷ்ரப் வஜ்டி துசுகி அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, முழுமையான விசாரணை மேற்கொண்டு, தொடர்புடைய மாணவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாரா நிர்வாகத்திற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
14 வயதுடைய அம்மாணவர், 17 வயது மாணவர்களால் பகடிவதை செய்யப்பட்டு, மனவேதனை அடைந்த நிலையில், விடுதிக் கல்லூரியை விட்டு வெளியேற விரும்புவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்தாம் படிவ மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், அவர்கள் 6 பேரும் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.








