முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு ஏற்பட்ட 1.18 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டிற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நஜீப் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதோடு, நம்பிக்கைத் துரோகம் இழைத்து 120 மில்லியன் டாலர் பணத்தைத் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக நீதிபதி அகமட் ஃபைருஸ் சைனோல் அபிடின் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, இழப்புத் தொகையான 1.18 பில்லியன் டாலர் மற்றும் அபராதத் தொகையான 120 மில்லியன் டாலர் என மொத்தம் 1.3 பில்லியன் அமெரிக்க டாலரை நஜீப் அந்நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நஜீப்பிற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை இந்தத் தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.








