கூலிம், ஜனவரி.18-
கெடா, கூலிம் ஹைடேக் அருகே உள்ள ஜாலான் சுங்கை கோப்பில் இன்று மாலை நடைபெற்ற இரு கார்கள் மோதிய பயங்கர விபத்தில், ஒரு காரில் பயணம் செய்த இரு சிறுவர்களும் அதன் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான புரோட்டோன் S70 வகை கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், அதிலிருந்த ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பிய வேளையில், மற்றொறு காரான பெரோடுவா விவாவிற்குள் சிக்கிக் கொண்ட மூவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக கூலிம் ஹைடேக் தீயணைப்பு நிலையத் தலைவர் அஸ்மீர் ஹசான் தெரிவித்தார்.
பெரோடுவா விவாவில் இருந்த இரு சிறுவர்களைப் பொதுமக்கள் உதவியுடன் மீட்ட போதும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழுவினர் உறுதிச் செய்ததோடு, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் சிறப்பு உபகரணங்கள் மூலம் வெளியே எடுக்கப்பட்டார். தீப்பிடித்த காரை தன்னார்வத் தீயணைப்புப் படையினர் முழுமையாக அணைத்த நிலையில், காயமடைந்த மற்றொரு காரின் ஓட்டுநர் சிகிச்சைக்காகக் கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.








