ஷா ஆலாம், டிசம்பர்.24-
கடந்த மாதம், பந்திங், கம்போங் சுங்கை இங்காட்டில் வீடு ஒன்றில் ஆதாரங்களைக் கைப்பற்றும் நடவடிக்கையின் போது, அங்கிருந்த 20 வயது ஆடவரைப் போலீசார் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த நவம்பர் 18-ஆம் தேதி, அந்த ஆடவரின் தாயாரிடமிருந்து பெற்ற புகாரினையடுத்து, இந்த விசாரணையானது மேற்கொள்ளப்படுவதாக கோல லங்காட் மாவட்ட துணை போலீஸ் தலைவர் முகமட் சுஃபியான் அமீன் தெரிவித்துள்ளார்.
புகார் அளித்த 39 வயது பெண்ணிடமிருந்து பெறப்பட்ட சிசிடிவி ஆதாரங்களின் படி, போலீசார் அந்த ஆடவரை பலமுறை கன்னத்தில் அறைந்ததாக நம்பப்படுகின்றது.
அதே வேளையில், வழக்கறிஞர் லத்திஃபா கோயா நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளக் கூறி, அந்த ஆடவரைப் போலீசார் தாக்கியதோடு, நெருப்பினால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 323-இன் கீழ் விசாரணை செய்யப்படுவதாக முகமட் சுஃபியான் தெரிவித்துள்ளார்.








