ஜார்ஜ்டவுன், நவம்பர்.16-
பினாங்கு, பெர்மாத்தாங் பாவோ பகுதியின் சாலைப் போக்குவரத்து சந்திப்பில் சட்டத்திற்குப் புறம்பான மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகளைச் சவால் விடுக்கும் விதமாக எந்த மன வருத்தமும் இன்றி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள்கள் உட்பட, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல், ஆபத்தான நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவது போன்ற குற்றச் செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு வருவது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
புக்கிட் அமானும், பினாங்கு போக்குவரத்துப் பிரிவினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில், ஒரே இரவில் 350க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகளும் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 250க்கும் குறையாமல் சம்மன்கள் விநியோகிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து கட்டுப்பாடு, செயலாக்கம், சம்மன் நிர்வாகப் பிரிவின் உதவி இயக்குநர் டெபுட்டி கமிஷனர் முகமட் ரோஸி ஜிடின் தெரிவித்தார். "உங்கள் உயிரை நீங்களே போக்கிக் கொள்ளும் முன், இந்தச் சட்டவிரோதச் செயலை உடனடியாக நிறுத்துங்கள்," என்று கடுமையாக எச்சரித்த அதிகாரிகள், சாலைப் பாதுகாப்புச் குறித்துச் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தக் கோரினர்.








