கங்கார், ஜூலை.26-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தமது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு முன்னாள் மாமன்னர் பிறப்பித்த ஒரு கூடுதல் அரசாணை உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், தாமும் விரிவாக விவாதித்து விட்டதாக துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சட்ட நடைமுறைக்கு ஏற்ப விரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்னோ தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இறைவன் அருளில் அனைத்துமே சட்ட நடைமுறைக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.
நஜீப் சம்பந்தப்பட் இந்த சட்ட நடைமுறை, மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். எனவே இந்த நடைமுறையை நாம் அனைவரும் மதிக்க வேண்டும் என்று கங்கார் அம்னோ டிவிஷன் கூட்டத்தை இன்று தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அஹ்மாட் ஸாஹிட் மேற்கண்டவாறு கூறினார்.
நஜீப்பை வீட்டுக் காவலில் வைப்பதற்கு முன்னாள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா பிறப்பித்த ஒரு கூடுதல் அரசாணை உத்தரவு உள்ளது என்பதைக் கூட்டரசு நீதிமன்ற விசாரணையின் போது, சட்டத்துறை அலுவலகம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நஜீப் , காஜாங் சிறைச்சாலையிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் தற்போது மேலோங்கி வருகிறது.








