கோத்தா கினபாலு, அக்டோபர்,06-
சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டது. இன்று பிற்பகல் 2.54 மணிக்கு கோத்தா கினபாலு, மெனாரா கினபாலு கட்டடத்தில் சபா ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்கு பின்னர் மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் இதனைத் தெரிவித்தார்.
சபா சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு மாநில ஆளுநர் துன் மூசா அமான் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, காலை 8.51 மணியளவில் முதலமைச்சர் ஹஜிஜி நோர், மாநில ஆளுநர் மூசா அமானுடன் இஸ்தானா ஶ்ரீ கினபாலுவில் சந்திப்பு நடத்தினார்.
சபா சட்டமன்றத்தில் மொத்தம் 79 இடங்கள் உள்ளன. இவற்றில் 73 இடங்கள் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளாகும். எஞ்சிய 6 இடங்கள் நியமன அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








