செகம்பூட்-இல் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அண்டை வீட்டுக்காரரை இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் துரத்தியதாக கூறப்படும் சம்பவத்தில், அவருக்கு ஏற்பட்ட முதுகெலும்பு முறிவுக்காக வியாபாரி ஒருவர் 2 லட்சத்து 48 ஆயிரத்து 457.60 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி தாமான் அஞ்சோங் தியாரா, பகுதியில் நடந்த சம்பவத்தில், நாய்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முயன்ற போது கீழே விழுந்ததாகவும், இதனால் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாகவும் கமல் அப்துல்லா வழக்குத் தொடர்ந்திருந்தார்.
நாய்களை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும், வீட்டின் நுழைவாயிலை மூடி வைக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சாவியா சாத், கமல் தனது குற்றச்சாட்டை நிரூபித்துள்ளதாகக் கூறி 1 லட்சத்து 78 ஆயிரத்து 457.60 ரிங்கிட் சிறப்பு இழப்பீடு, 70 ஆயிரம் ரிங்கிட் பொது இழப்பீடு மற்றும் 15 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவு வழங்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், கமல் தன்னை மிரட்டியதாக வியாபாரி தாக்கல் செய்த எதிர்வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.








