தமது தந்தை அகமத் ஜாஹித் ஹமிதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை, தாம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என அவரது மகளும் அம்னோ மகளிர் செயற்குழு உறுப்பினருமான நூருல் ஹிடயா அகமத் ஜாஹித் தெரிவித்துள்ளார்.
தமது தந்தையின் கொள்கையை மதித்து இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றமானது பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒரே நேரத்தில் அரசியல் பதவியில் இருப்பதற்கான இடமாக மாறிவிடக் கூடாது என்பதே தமது தந்தையின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எதிர்காலத்தில் மாநில சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை.
துணைப் பிரதமருமான சாஹிட் ஹமீடி, பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியை 1995-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.
இதற்கு முன்பு தந்தை–மகன் இருவரும் ஒரே காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சம்பவங்கள் உள்ளன.
அவற்றில் லிம் கிட் சியாங் – லிம் குவான் எங் மற்றும் கர்பால் சிங் – கோபிந்த் சிங் தியோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதனிடையே, அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பாரிசான் நேஷனல் கட்சியின் தேர்தல் இயந்திரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தபூங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கட்சித் தலைவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் காரணமாக தேர்தல் தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேஷனல் கூட்டணி மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான தயார் நிலையை ஏற்கெனவே தொடங்கியிருக்க வேண்டிய நிலையில், தற்போதைய முறைகேடு விவகாரங்கள் அதற்கு இடையூறாக அமைந்துள்ளதாகவும் நூருல் ஹிடயா விவரித்துள்ளார்.








