Aug 29, 2026
Thisaigal NewsYouTube
ஊழலுக்கு எதிராக போராடும் வலுவான கொள்கைகளுடன் அரசியலுக்கு வாருங்கள் / மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

ஊழலுக்கு எதிராக போராடும் வலுவான கொள்கைகளுடன் அரசியலுக்கு வாருங்கள் / மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் வலியுறுத்து

Share:

அரசியலில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் நல்ல பண்புகள் மற்றும் வலுவான கொள்கைகளுடன் மக்கள் சேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் என்பது “ஆட்சி நிர்வாகத்தின் கலை” என்றாலும், அது சில நேரங்களில் நச்சுத்தன்மை கொண்டதாக மாறக்கூடும் என எச்சரித்த அன்வார், அரசியலில் நுழையும் இளம் தலைமுறையினர் வலுவான கொள்கைகளையும் அவற்றை நிலைநிறுத்தும் அர்ப்பணிப்பையும் கொண்டிருப்பது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலுக்குள் நுழைந்தால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அன்வார், நாட்டில் நிலவும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட முறைகேடுகளை அகற்ற வேண்டும் என்றும் மாணவர்களை வலியுறுத்தியுள்ளார்.

புக்கிட் மெர்தாஜாம்-ல் உள்ள துவாங்கு பைனூன் ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் நேற்று மாணவர்களுடன் நடைபெற்ற “தெமு அன்வார்” நிகழ்ச்சியில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக மலேசியா பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு சர்ச்சைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 1எம்.டி.பி ஊழல் விவகாரத்துடன், அண்மைய காலத்தில் ஃபெல்டா மற்றும் தபூங் ஹாஜி நிர்வாகத்தில் ஏற்பட்ட முறைகேடுகளையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சர்ச்சைகள் குறித்து பல அரசியல்வாதிகள் அவற்றை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும், ஊழலில் ஈடுபட்டவர்களின் செயல்களுக்கு அதிகமான பரிவையும் ஆதரவையும் வெளிப்படுத்துவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலை கண்ணியத்துடன் நடத்தினால், அது ஒரு கண்ணியமான தொழிலாக இருக்க முடியும் என்றும், வெளிப்படையாக ஊழலில் ஈடுபடுபவர்களின் தாக்கத்துக்கு நீங்கள் ஆளானால், அரசியல் ஒரு அழுக்கான, ஊழல் நிறைந்த தொழிலாக மாறிவிடும் என்றும் அன்வார் மாணவர்களை எச்சரித்துள்ளார்.

Related News